Tuesday, May 17, 2016

சுமேரியர்கள் 4

முன்னோர்களின் பகல் சிறியது. இரவு பெரியது. பகலில் உணவுத்தேவைக்காக உழைத்த மனிதன் இரவில் சிந்தித்தான். இரவு நீண்டு பெருத்தது. மாலை மயங்கியதும் மற்ற விலங்கினங்கள் உறங்க.. மனிதனின் சிந்தனை விழித்துக்கொண்டது. தான் பகலில் கண்ட ஒவ்வொன்றையும் மறுயோசனை செய்ய ஆரம்பித்தான். புதிதாக தான் கண்ட ஒவ்வொன்றும் அவனை ஆச்சரியப்படுத்தியது. மனதின் ஆச்சர்யத்தை, உணர்வை அவனால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டான். மொழி அவனுக்கு உதவியது.
மனித வளர்ச்சியானது அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிக்கையில் துவங்கியது என்கிறார்கள். உண்மையில் அவன் சிந்திக்கத்துவங்கிய கணத்தில் தான் துவங்கியது. அந்த சிந்திக்கத்துவங்கிய கணம் என்பது இரவுதான். மாலை மங்கியதும் மனிதனின் உடலுக்கான வேலை நின்றுவிடுகிறது. அவன் படுக்கைக்குச் செல்கிறான். மனிதன் படுத்தவுடன் தூங்கிவிடுவதில்லை. அவன் படுத்தவுடன் அவன் சிந்தனை விழிக்கத்துவங்குகிறது. தூக்கமற்ற மனிதன்தான் தன் தேவைக்கேற்ப புதுப்புது கண்டுபிடிப்புகளைத் துவங்கினான். புதுப்புது சிந்தனைகளை முன்வைத்தான். இப்போதும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் இசையை இரவில் அமைப்பதை காண்கிறோமே!
இப்படி இரவில் யோசிக்கத்துவங்கிய மனிதன் அவன் கண்ணெதிரே விரிந்து பரந்து கிடக்கும் வானத்தைக் கூர்ந்து நோக்க தவறினான் இல்லை. அதன் அசைவுகளை கவனித்தான். ஒவ்வொன்றையும் குறிப்பெடுக்கும் பழக்கமும் அவனுக்கு அதிக வலிமை சேர்த்தது. அதிசயங்கள் நிறைந்த வானமண்டலம் மனிதனிக் குறிப்புகளில் பதிவேறத்துவங்கியது.
சுமேரியர்களும், விவசாயத்தைக் கண்டனர். கட்டிடங்களைக் கண்டனர். வாழ்கை நடைமுறைகளைக் கண்டடைந்தனர். எழுத்தையும் கணக்கையும் கண்டனர் என்பதையும் தாண்டி அவர்கள் வான சாஸ்திரத்திலும் தங்கள் பங்கை உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. அவர்கள் சூரியனின் சுற்றுப்பாதையைக் கணக்கில் கொண்டு ஒரு மண் பாட்டித்தில் குறிப்பேற்றப்பட்ட ஏடுகளைக் கொண்டிருந்தனர்.
கி.மு.1330 வாக்கில் ஏழுத்துருவாக்கப்பட்ட ஒரு சுமேரியர்களின் சூரியநாட்காட்டி இப்போதைய ஈரான் ஈராக் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதில் சூரியனின் சுற்றுப்பாதை, அதன் வெய்யில் பாதிக்கும் பகுதியின் நீளம் வெய்யிலின் கோணம் போன்றவற்றை துல்லியமாக கணித்து குறிப்பெடுத்திருக்கின்றனர்.
இது அவர்களின் சூரியனின் பாதைகளைப் பற்றிய குறிப்புத்தானே தவிர அவர்கள் அதனைக் முறையானா நாட்காட்டியாக பயன்படுத்தினார்களா? என்பதைப் பற்றிய தெளிவான குறிப்புக்கள் காணப்படவில்லை. அவர்கள் சூரிய வழிபாட்டு முறைகளும் சந்திரவழிபாட்டை விட குறைவாகவே காணப்படுகிறது.



நாம் முன்பே பார்த்ததுமாதிரி “நன்னா“ என்னும் சந்திரக்கோவிலைக் கட்டி வழிபட்டனர். இந்த சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்வின் அடிப்படையில் மாதங்களைக் கணக்கிட்டனர். அவர்களின் மாதத்தின் துவக்கமானது அம்மாவாசைக்குப்பிறகு முதலில் பிறை தெரியும் நாளில் துவங்குகிறது. சந்திரப்பிறையின் அடுத்த சுற்று வரும்வரை ஒரு மாதம். அதுவும் சுமேரியர்களின் மாதங்களுக்கான பெயர்களும் *குறிப்பில்லை. பொதுவாக சுமேரியர்களின் பெரும் பண்பாட்டைப் பின்பற்றியவர்கள் பாபிலோனியர்கள். அவர்களின் காலண்டர் மாதங்களே சுமேரியர்களின் காலண்டர் மாதப்பெயர்களாக கருதுவதற்கு இடமிருக்கிறது.
ஆண்டுகள், மாதங்கள் பற்றிய சுமேரியர்களின் கணக்குகள் இவ்வாறு இருக்க, வாரங்கள் கிழமைகள் பற்றிய அவர்களின் பதிவுகள் ஆச்சர்யமளிக்கின்றன. உண்மையில் பதியப்பட்ட அனைத்து பழங்கால நாகரீக ஆவணங்களில் மிகப்பழமையானதாக இப்போது கருதப்படுவது சுமேரியன் நாகரீக படிமங்கள்தான்.
அவர்களின் அந்த ஆச்சர்யமான வாரச்செய்தி அவர்கள் 5 கிரகங்களை அறிந்து இருந்ததுதான். அவர்கள் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுப்பிடர் மற்றும் சாட்டர் ஆகிய ஐந்து கிரகங்களையும் அறிந்து இருந்தனர். ஆனால், இவற்றின் இயக்கங்களைப் பொருத்து இவர்கள் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. இந்த கிரகங்கள் அனைத்தும் பூமியைச் சுற்றிவருவதாக அவர்கள் கருதினர். இந்த ஐந்து கோள்களுடன் சேர்த்து அவர்களின் நம்பிக்கையின் படி பூமியைச் சுற்றி வரும் சந்திரனும், சூரியனையும் சேர்த்து ஏழுநாட்கள் கொண்ட வாரத்தை முதன்முதலில் சுமேரியர்களே உருவாக்கினர்.

மற்றபடி அவர்களின் முழுமையான காலண்டர் கணக்குகள், இன்னபிற பெயர்கள் எல்லாம் சுமேரியர்களைப் பின்தொடர்ந்த பாபிலோனிய நாகரீகத்தில் இருந்துதான் நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Monday, May 9, 2016

சுமேரியர்கள் 3

ஆரம்ப கால நதிக்கரை நாகரீகங்கள் உலகின் பலபகுதியிலும் பரவி இருந்து இடத்தால், மொழியால், வாழ்ந்த மனிதர்களின் நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகளில் பலவற்றில் ஓரளவிற்கு சம அறிவினர்களாகவே இருக்கிறார்கள் என்பது அவர்தம் எச்சமிச்சங்களைக் கொண்டு நாம் அறிகிறோம்.



உலகமுழுவதும் உள்ள நாகரீகங்கள் அனைத்தும் சற்றேரக்குறைய சமகாலத்தில் ஆற்றங்கரைச் சமவெளியில் காலூண்றியவையே. இவை ஆற்றங்கரையில் அமைந்ததன் காரணம் விவசாய வசதிக்காகத்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்களின் வற்றாத உணவுத்தேவை வேட்டையாடி சமூகத்தில் முழுமையாக நிரம்பப்படவில்லை, மேலும் பருவகால மாற்றங்களில் உணவுகிடைப்பது துர்லபமாய் இருந்தது. உணவு கிடைக்காத சமயங்களுக்காக சேமிக்கத்துவங்கினர். சேமித்த தாவர வித்துக்கள் திரும்ப முளைக்கத்துவங்கின. இதனைக் கூர்ந்து நோக்கிய மனிதன் விவசாயத்தை அறிந்தான். இந்த விவசாயத் தேவையே அவர்களை இன்ன பிற கண்டுபிடித்தலுக்கும் முன்னெடுத்துச் சென்றது எனலாம்.
நாகரீகத்தைக் கண்டடைந்த மக்கள், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்வதற்காக ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தனர். தங்குவதற்கு சிறு குடில்கள் முதல் பெரும் கட்டிடங்கள் வரை கட்டிக்கொண்டனர். குழுக்களாக பிரிந்த வாழ்ந்த அவர்கள் தங்களுக்கென அரசு முதல் அரண்கள் வரை அமைத்துக் கொண்டனர்.
விளைச்சலை எதிர்நோக்கும் பொருட்டு இயற்கையை கண்காணித்தனர். இயற்கையினை தொடர்ந்து கண்காணிக்க அவர்கள் காணும் ஒவ்வொரு பொருளி்ற்கும் அளவீடு தேவை
தான் கண்காணித்ததை ஏனையோருக்கு பகரும் பொருட்டுப் குறிப்பெடுத்தனர். இந்த கணக்குகள் குறிப்புகள் காலண்டராயின.
சுமேரியர்கள் புராதணசின்னங்களையும், நம்மைப்போலவே புராணங்கள் பலவற்றையும் கொண்டவர்கள் எனக்கண்டோம். அவர்களின் “ஊர்“ எனும் ஊர் மிகப்பெரிய நகரமாக இருந்தது. அந்த நகரில் தான் பைபிலில் குறிப்பிடப்படும் “ஆபிரகாம்“ எனும் ஆதிகால மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த நகரில் கி.மு.2100 வாக்கில் “நம்மு“ என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனது காலத்தில் சந்திரனுக்கு என “சிகுரத்“ என்னும் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. சுமேரியர்கள் சந்திரனை “நன்னா“ என்று அழைத்தனர். இந்த நன்னா எனும் சந்திரனுக்கான கோவிலே.. லுனார்காலண்டரினைப் பிரதிபலிப்பதுபோன்ற தோற்றத்தில் உள்ளது. மேலும் இக்கோவிலின் கட்டுமானங்கள் சற்று எகிப்திய மற்றும் இந்திய பாரம்பரியங்கள் இணைந்த கட்டிட அமைப்பில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர்களில் வியக்கவைக்கும் சித்திர கலை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.



கணக்குகளைப் பொருத்தவரையில், அதற்கு முன்பு இருந்தவர்களுக்கு மாற்றாக. தங்கள் கைவிரல்களின் அடிப்படையில் பத்து பத்து எண்களாக பலவற்றைக் கணக்கிட அறிந்து வைத்திருந்தனர். ( மாயன்களின் அடிப்படை எண்கள் இருபத்திநான்காகவும், சீனர்களின் அடிப்படையெண்கள் 12, 15 என பலவாறு வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்) இந்த கணக்குகளின் முதன்மைபோல.. எழுத்து உருவம் கண்டுபிடிப்பிலும் முதன்முதலாக அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் பதிவுறு சாதனையைப் புரிந்தது.. சுமேரியர்களே ஆவர்
இவர்களது எழுத்து அமைப்பு “ஹாப்பு“ என்று அழைக்கப்படுகிறது. இதன் வடிவமும் இந்தய அமைப்பை ஒத்து இருப்பதாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் எழுத்து அமைப்பை ஒத்ததாக உள்ளது. மேலும் குறிப்பாக.. சுமேரியர்களின் ஆதிமனிதர்கள் வாக்கியமான  “கி ரி கி பட் டு ரி யா“  என்ற வாக்கியமே குமரிக்கண்டம் எனும் தமிழர் பகுதியைக் குறிப்பது ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு “ ரி ட“ ஆகும். சுமேரியர்கள் ஒருசமயம் நமது குமரிக்கண்டம் எனும் லெமூரியா கடல் மூழ்கியபோது வடமேற்கிற்கில் நகர்ந்து குடியமர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருது கோள்களும் உள்ளது. எது எப்படியாயினும் உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன்பிற்காலத்திலும் சுமேரியர்கள் நாவாய்கள் மூலம் இந்திய கடல் பரப்பில் கோலோச்சினர் எனவும்.. இந்தியர்களுடன் குறிப்பாக தமிழர்களுடன் கடல்சார் வாணிபத்தில் ஈடுபட்டனர் எனவும் குறிப்புகள் உள்ளன.
இதையெல்லாம் கொண்டு ஒப்பு நோக்கும் போது, தமிழர்கள்களாகவோ அல்லது தமிழர்களுக்கு இணையானவர்களாகவோ.. சுமேரியர்களைக் கருத வாய்ப்பிருக்கிறது. கலாச்சார அடிப்படையிலும் வாழ்க்கை முறை அடிப்படையிலும் சுமேரியர்கள், ஆதித்தமிழர்களுடன் ஒத்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். மாடுகளை ஏர் என்னும் உழவுக்கருவியில் இணைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தியது முதல்.. விவசாய விளைபொருளை முதல்முதலாக இனிப்புடன் சேர்த்து சமைத்து சூரியக்கடவுளுக்கு படைக்கும் பழக்கமும் அவர்களுக்கு இருந்து இருக்கிறது.

இவ்வளவு இணைந்த அவர்கள்.. காலண்டரை எப்படிக் கணக்கிட்டார்கள்? அவர்கள் காலண்டரின் முதல்மாதம் எது?

Friday, January 8, 2016

சுமேரியர்கள் 2

மெசோ என்ற கிரேக்கச்சொல்லிற்கு இடைப்பட்ட பகுதி, அல்லது நடுவில் உள்ள பகுதி என்று அர்த்தம்.  பட்டோமி என்றால் நதிகள் என்று அர்த்தம். மெசப்பட்டொமியா என்பது ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி என்று அர்த்தம். (கரெக்ட்.. இப்பத்தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. பாட்டுக்கேட்டேன்) இந்த மொசப்பட்டோமியாவில் வாழ்ந்த 'கருந்தலையர்கள்' என்று அக்தாத் இன மக்களால் அழைக்கப்பட்ட சுமேரியர்களுக்கு.. உண்மையில் சுமேரிய மொழியின்படி பிரபுக்கள் போல வாழ்ந்தவர்கள் என்று அர்த்தம்.

சுமேரியர்களுக்கு அடிப்படையாக மூன்று தொழில்கள் இருந்தன. மீன்பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல் மற்றும் விவசாயம். (வியாபாரம் எல்லாம் இந்த முத்தொழில்களை ஒட்டி நடைபெற்றவையே. அது பிரதான தொழிலாக அங்கீகரிக்கப்பட வில்லை ) இந்த முத்தொழில்களிலும் முக்கியத் தொழிலாகக் கருதப்பட்டது விவசாயமே.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி மொசபடோமிய பகுதிகளில் ஆண்டிற்குப் பெய்யும் பருவமழையளவு மிகவும் குறைவு. ( சென்னைவாசிகள்.. அப்ப மொசபடோமியாவுக்கு குடி போய்டலாம்னு நினைக்காதீங்க. நான் சொல்லறது இன்றிலிருந்து ஏறக்குறைய ஏழாயிரம் எட்டாயிரம் ஆண்டுகளுக்குகு முன்பு) எனவே, சுமேரியர்கள் நதிகளின் பயன்பாட்டில் தான் விவசாயம் மேற்கொண்டனர் என்பது புரியக்கூடியதுதான்.

நதிகளின் குறுக்கே தடுப்பணைகள்கட்டி ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு நதிநீரைப் பயன்படுத்தினர் என்பது எவ்வளவு பொறியில் கணக்குகளின் பாற்பட்டது என்பதும், அதை அன்றே அவர்கள் அறிந்திருந்தனர் என்பதுதம் தான் சுமேரியர்களை சுமார் இயர்கள் என கொள்ளாமல் உலகம் வியந்து பார்க்கிறது. மண்பாண்டங்களின் பயன்பாடு மிகமுழுமையடைந்ததும் சுமேரியர்களின் நாகரீகத்தில் தான். கற்காலம் முடிந்து, உலோகபயன்பாட்டுக்காலம் வளர்ந்து, எளிதில் கையாளக்கூடிய மண்பாண்டங்களையும், உலோகத்தாலான வேட்டையாடும், மற்றம் விவசாய கருவிகளையும் சுமேரியர்கள் கண்டறிந்திருந்தனர்.


ஏர், கலப்பை, ஏற்றம் போன்ற உபகரனங்களையும் அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். விலங்குகளை வேளாண் வேலைகளுக்குப் பயன்படுத்துதல் போற்ற பல கலைகளையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

சக்கரங்களின் பயன்பாடானது, வண்டி வாகனங்களில் மட்டுமின்றி, மனித வேலைகளைச் சுலபமாகச் செய்யவும் பயன்படுவதாக அவர்கள் செய்துவைத்திருந்தனர். இருசும் கப்பியும் நீரேற்றி இறைப்பதற்காகவும், மண்பாண்டங்கள் செய்யும் அடிச்சக்கரமாகவும் அவர்கள் சக்கரத்தினைப் பயன்படுத்தினர்.

ஆற்றங்கறைகளில் வேளாண்மை என்பதால் பரவலாக கிராமங்கள் மலிந்த பகுதியாகத்தான் மெசபடோமியா இருந்தது. ஆயினும் பல நவநாகரீக நகரங்களையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த நகரங்களில்தான் அரசர்கள் இருந்தனர். ஒவ்வொரு நகரும் ஒரு காவல் தெய்வத்தையும் கொண்டிருந்தது. அரசர்கள் அந்த காவல்தெய்வங்களின் பிரதிநிதிகளாக நகரத்தை ஆட்சி புரிந்தனர். மக்களும், சட்டமும், அரசர்களும் அந்த காவல்தெய்வங்களின் தெய்வீகசக்திக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட நிர்வாக மையங்களான நகரங்கள் இருந்தன. இவற்றிற்கு

7.   கிஷ்
8.   ஊர்

எட்டாவது ஊரின் பெயரைக் கவனித்தீர்களா? அந்த ஊரின் பெயர் ஊர். எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப்பெயரை ஒத்து வருகிறதல்லவா?

இப்படிப்பட்ட ஊரின் தெய்வங்களும் நமது பண்பாட்டை ஒட்டியே வருகின்றன. அவர்கள் படைக்கும் தெய்வம், காக்கும் தெய்வம், போர் முதலான அழிக்கும் தெய்வம் என ஆண் தெய்வங்களை பிரதான தெய்வமாக வணங்கினர். நமது பிரம்மா, விஷ்ணு, சிவன் போல.

வீரத்தின் உருவாமகவும், அறிவின் அடையாளமாகவும், செல்வத்தின் சேரிடமாகவும் பெண் தெய்வங்களை வணங்கினர். இது நமது சக்தி, சரஸ்வதி, லட்சுமி போன்றதாகும்.


மேலும் பல புராண கதைகளும் சுமேரிய வழக்கில் இருந்தது. இந்தக்கதைகளில் எல்லாம் தீய சாத்தான்களின் சக்தியிலிருந்து தெய்வங்கள் மக்களைக் காத்த கதைகள் பல உள்ளன. இந்த தீய சாத்தான்களும் தத்தமக்கான சக்திகளை தெய்வங்களிடமிருந்தே ஆசீர்வாதமாகப் பெற்றன என்ற விசயம் கூட நமது புராணக்கதைகளை ஒத்ததாகவே இருக்கிறது.

Tuesday, December 15, 2015

சுமேரியர்கள் – 1

உமக்கான வேலைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். எனக்கான வேலைகளை நான் பார்த்துக்கொள்வேன். நமக்கான வேலையை யார்பார்ப்பது?
விவசாயம் கண்டுபிடித்தாயிற்று, அதன் விளைச்சளை பகிர்ந்து கொள்ள வியாபாரம் ஆயிற்று. சமூகமாக வாழத் துவங்கியாயிற்று. இந்த அமைப்பையெல்லாம் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளிடமிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது? யார் பாதுகாப்பது?
என்றெல்லாம் யோசிக்கத்துவங்கிய மனிதன்தான் அரசாங்கம் என்பதைக் கண்டறிந்தான். அதன் நெறிமுறைகளை வகுத்தான். அதன் நிர்வாகத்தைச் சரிவரச்செய்யும் மனிதனை அரசனென்றும், கோ என்றும், இறை என்றும் தொழுதான்.
இப்படி முறையான அரசாங்க அமைப்பை ஏற்படுத்திய முந்திய சமுதாயம் சுமேரியர்களின் சமுதாயம் ஆகும். சற்றேரக்குறைய மாயன்களுக்கு நிகரான காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் சுமேரியர்கள். இன்றைய ஈராக் இருக்கும் பகுதிதான் பண்டைய “சுமேரியா“.

“சுமேரியா“ என்று நானாகத்தான் குறிப்பிடுகிறேன். உண்மையில் அந்தப் பகுதியின் பெயர் “மொசபடோமியா“. உலகின் மிகப்பழுத்த ஆற்றங்கரை நாகரீக பிரதேசங்களில் மொசபடோமியாவும் ஒன்று. இயேசுகிருஸ்துவிற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பட்ட சமூகமாக வாழ்ந்து தங்கள் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர் மொசபடோமியர்கள். 
இங்கு வாழ்ந்த சுமேரியர்கள் மொசபடோமியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மொசபடோமியர்களுக்கு சுமேரியர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்தோமானால்.. அது நம் தமிழர்கள் என்ற பெயர் நமக்கு வந்ததைப் போன்றதே. ஆம், அன்றைய ”யுப்ரட்டீஸ்“ “டைகரீஸ்“ என்ற இரு நதிகளுக்கு இடைய இருந்த புமி மொசப்படோமியா. இங்கு வாழ்ந்த மோசபடோமியர்கள் பேசிய மொழி சுமேரியம் என்பது. அதனால்தான் சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள்.
இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஏழாயிரம் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, இன்று வழக்கொழிந்து போன ஒரு நாகரீகத்தை, அவர்கள் விட்டுப்போன நிரந்தமான கல்கட்டிடங்கள், பயன்படுத்திய உபகரணங்களின் எச்சங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது சரி. அவர்கள் இன்ன மொழிதான் பேசினார்கள் என எப்படி சொல்லமுடியும் என சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம்.
இதை வரலாற்று அறிஞர்கள் எப்படிக்கணிக்கிறார்கள் என்றால், ஒரு நாகரீகத்தினைத் தொடர்ந்தோ, அதற்கு மாற்றாகவோ வேறெரு நாகரீகம் உருவாகும். இப்புதிய நாகரீகத்தின் குறிப்புகளில் இருந்தும் ஆரம்ப நாரீகத்தின் சாரம்சங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறுதான், “அக்தாத்“ எனப்படும் ஒரு சமூகத்தின் குறிப்புகளின் அடிப்படையில் மொசபடோமியர்கள், சுமேரியர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றனர். அக்தாத் மொழியில் ”சுமேரியர்கள்“ என்றால் “கருந்தலை மனிதர்கள்“ என்று பொருளாம். இந்த சுமேரியர்கள் பேசிய மொழி ”சுமேரியம்”. சுமேரியம் என்ற சொல்லே அக்தாத் இனத்தினர் குறிப்பிடுகிறார்கள். எனவே, சுமேரியம் பேசியவர்கள் சுமேரியர்கள் என கீழிந்து மேலாகக் கொள்ளப்படுகிறது.
இந்த சுமேரியர்கள், வழக்கமான மற்ற நாகரீகத்தைப்போல், கட்டிங்கள் கட்டினார்கள், கணக்கில், வாணியலில் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதையும் தாண்டி சுமேரியர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு என்பது, அவர்கள் முதன்முதலில் முறைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பைக்கொண்டிருந்தனர். இரண்டாவது அவர்கள்தான் “சக்கரத்தின்“ பயன்பாட்டைக் கண்டறிந்த முன்னோடியினர். இந்த இரண்டிற்கும் மேலாக இருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த மூன்றாவது சிறப்பம்சம், அவர்கள் ஆகச்சிறந்த நீர்மேலாண்மையை மேற்கொண்டிருந்தனர்.
மொசபடோமிய பகுதி இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியானாலும், இந்தப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. ஆண்டிடொன்றிற்கு 13 செ.மி.யையும் விடக்குறைவு. இதனால், ஆண்டு முழுவதுமான விவசாய தேவைக்கு பல்வேறு ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் வெட்டி அதனை முறையாகப்பயன்படுத்திவந்தனர். இந்த பொதுநீர் மேலாண்மையை சுமேரிய அரசு செவ்வனே செய்து வந்தது. கவனிக்கவும், “சுமேரிய அரசு“ நீர்மேலாண்மையை செவ்வனே செய்து வந்தது.

இவ்வாறெல்லாம் திட்டமிட்ட வாழ்க்கை வாழ்ந்த, வேளாண் வளமை மிகுந்த சுமேரியர்கள் கணக்கிலும் புலிகள் தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

Sunday, November 15, 2015

நம்மைப் போன்ற நாகரீகம்!

இஸ்லாமிய மாத வரிசைகள் நன்கு குரானை அறிந்து இஸ்லாமிய காலண்டரை முறையாகப் பயன்படுத்திவருபவர்களுக்குத்தான் தெரியக்கூடும். அது அறியாதவர்களிடம் மாதங்கள் பற்றிக் கேட்போமானால் அவர்கள் கொச்சையாக பேச்சு வழக்கில் உள்ள .. ஆஷரா, சபர் கழிவு, மவ்லூது, மைதீன் கந்தூரி. மீரான் கந்தூரி, விராத், தோவத்து, நோன்பு என்று அடுக்கிக்கொண்டே போவார்கள். இவை ஒத்துக்கொள்ளப்பட்ட இஸ்லாத்தின் மாதங்கள் அல்ல. ஆனால், ஒத்துக்கொள்ளப்பட்ட மாதங்களில் வரும் நிகழ்வுகள். 

முதலில் நிகழ்வுகளைச் சொல்லி மாதங்களை நினைவுகூறும் நடைமுறை வந்தது. பின்னர் அதுவே.. நிலைபெற்று விட்டது என்பதுதான் இத்தகைய தன்மைக்குக் காரணம்.

இஸ்லாமியர்களின் பன்னிரண்டு மாதங்களில் - துல்கஅதாஃ, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் மட்டும் புனிதமாதங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த நான்கு மாதங்கள் தீமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் போர் செய்தல் தடுக்கப்பட்டு உள்ளது. போர்கள் கொலைக்கும், கொடும் குற்றங்களுக்கும் வழிவகுப்பதால் குறைந்த பட்சம் இந்த நான்கு மாதங்களிலாவது அமைதி நிலவட்டும் என்ற நோக்கில், இம்மாதங்களில் போரில் ஈடுபட இறைமார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 

மக்கத்துக்கு காஃபீர்கள் (முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள்) பல்லாண்டுகளாக முஸ்லீம்களை மதீனாவிற்குள் நுழைய இடம் அளிக்க வில்லை. அவர்கள் அல்லாஹீவிற்கும் இறைத்தூதருக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம் இளைஞர்களைக் கொன்று குவித்தனர். 

இவர்களிடம் தூது செல்வதற்காக நபிகள் ஒரு குழுவினரை போர் தடைசெய்யப்பட்ட புனித மாதத்தில் அனுப்பினார். ஆனால் காஃபீர்களைக் கண்டவுடன் தூதுக்குழுவினர் போர்ச்செயலில் ஈடுபட்டனர். இது முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவர்கள் தூதுக்குழுவினரைக் கண்டித்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து நபிகள் புனிதமாதத்தில் நடைபெற்ற போர்களை மிகவும் வெறுத்தார் என்பது தெரிகிறது.

ஆனால், இஸ்லாமியர்கள் போர் செய்யாத போது, எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் என்ன செய்வது எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது.. நீங்கள் அல்லாஹுவிடம் நம்பிக்கையாய் இருங்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் புனித மாதங்களில் உங்களைத் தாக்குபவர்கள் மீது நீங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளலாம். என நபிகள் விலக்கு அளித்துள்ளார்.

போர் தவிர, விபச்சாரம், எளியோர்க்கு தீங்கு இளைத்தல் போன்றவையும் புனித மாதங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. புல் வெட்டுதல் மரம் வெட்டுதல் போன்றவை கூட ஹராத் (பாவச்செயல்) தான். இன்னும் சொல்லப் போனால் தாடி மீசை சிரைத்தல் கூட இந்த மாதங்களில் பாவக்கணக்கில்தான் வருகின்றன.

சிலர் (அறியாமையில்) ரமலான் மாதமும் புனிதமாதங்களில் ஒன்றாக கணக்கிடுவார். ஆனால் குரானில் நான்கு மாதங்கள் மட்டுமே புனிதமாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதங்களை தீமைகளில் இருந்து விலகி அல்லாஹ்வை அடைய வழி செய்யப்பட்டுள்ளது. மேற்கூரிய இந்த நான்கு மாதங்களைத் தவிர ஐந்தாவது மாதமாக ரமலானை சேர்த்துக் கொள்ள முடியாது. ஆனாலும், ரமலான் மாதம் இறைவனால் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட – நோன்புக்கான மாதம் தான்.

ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் இஸ்லாத்தின் காலண்டர், முஸல்மான்களின் வழிபாட்டு, மதம்சார் விழாக் கொண்டாட்ட நெறிமுறைகளை உலகெங்கும் அனைவருக்கும் ஒன்றாக பரிபாலிக்கிது. ஈது (விழா) நாளில் கருப்பர், சிவப்பர், பணக்காரன், ஏழை, மேற்கத்தியர், கிழக்கு நாட்டிலிருந்து வருபவர் போன்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரையும் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் ஒன்றினைக்கிறது. அனைவரையும் “ஜம் ஜம்“ புனித நீரைப்பருகியவாரே மக்காவின் சதுக்கத்தில் அல்லாஹ்வைத் தொழ வைக்கிறது.

இம்மாதிரியான மதம்சார் ஒற்றுமையை விளைவிக்கும் காலண்டர் ஒன்று இருக்குமானல் அது இஸ்லாமிய காலண்டர் ஒன்றுமட்டும்தான். 

ஆக, இஸ்லாமிய காலண்டர்கள் ஆண்டுத்துவக்கமானது அதன் சுற்றான பன்னிரண்டு நிலவின் மாதங்களைத் தொடர்ந்து வருகிறது. வாரங்கள் சனியில் துவங்கி வெள்ளியில் முடியும் ஏழு நாட்களைக் கொண்டவை. நாட்கள் இரவு நிலவோடு ஆரம்பித்துத் தொடரும் இருபத்தி நான்கு மணிநேரத்தை உடைய ஒரு இரவும்-பகலும் சேர்ந்தது என்பனவற்றையெல்லாம் கண்டோம்.

இம்மாதிரியான உலகெங்கும் பயன்படுத்தப்படும் காலண்டர் போன்றது நம் தமிழ்க்காலண்டர் இல்லை. இது நமது இனக்குழுவின் பண்பாட்டின், பாரம்பரியத்தின் விழுமியங்களைக் கொண்டு நெய்யப்பட்டதாகும்.



நம்மைபோலவே, மாயன்களைப் போலவே, சீனர்களைப் போலவே - உலகின் வேறுஒரு பகுதியில் வாழ்ந்த ஆதிகுடிகளான, மற்றொரு நாகரீகத்தின் தோற்றுவிப்பாளர்களான சுமேரியர்களும் – துவக்க கால காலண்டரின் வடிவமைப்பாளர்கள் தான்.

Thursday, November 5, 2015

நல்லவை நான்கு

மாதங்கள் சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்தலை ஒட்டி ஆரம்பிக்கவும் முடியவும் செய்கின்றன. இப்படிச் சரியாக 29 அல்லது 30 நாட்கள் ஒரு மாதத்திற்கு. ஆண்டுக்கு 354 அல்லது 355 நாட்கள்.

அப்படியானால் கிரிகோரியன் காலண்டருக்கும் இஸ்லாமிய காலண்டருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் வருமே என்று கேட்கிறீர்களா? ஆமாம் வரும்தான். ஆனாலும் இப்படித்தான் இஸ்லாமிய காலண்டர் இயங்குகிறது. 

இந்த முன்னூற்றி அறுபத்து ஐந்தேகால் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவரும் காலம். மாறிமாறி வரும் பருவநிலை மாற்றங்கள் – இதைப்பற்றி யெல்லாம் இஸ்லாத்காலண்டர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், ஹிஜ்ரத் எனப்படும் ஆண்டுக் கணக்கானது முழுக்க முழுக்க தனித்துவமானது, நிலவைப் பின்பற்றியே செல்லக்கூடியது. நிலவு எல்லாப்பருவத்திலும் எந்நாளும் போல் தன் வளர்ந்து தேயும் பணியைச் செவ்வனே செய்வது போல், ஹிஜ்ரத்தும் தன்வழி செல்கிறது.

ஒரு காலண்டர் என்பது பண்பாட்டின் வெளிப்பாடு. பயன்பாட்டின் காலக்கோடு. அப்படித்தான் உலகின் எல்லாப்பாகங்களிலும் காலண்டர்கள் குறிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நைல்நதியின் வெள்ளப்பெருக்கை கணக்கில் கொள்வதற்காகத்தான் எகிப்தியர்கள் பருவநிலை மாற்றங்களை குறித்துக்கொண்டார்கள் எனப்பார்த்தோம். இதில் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்தும், அவர்கள் வாழ்வாதாரம் குறித்தும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.


அதே போல்தான் விவசாயம் சார்ந்த நாடுகளில், சூரியனின் அடிப்படையிலான காலண்டர்களும் தோன்றின. ஏனெனில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயமானது முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களுக்கு உட்பட்டது. பருவநிலை மாற்றமோ பூமி சூரியனைச் சுற்றிவரும் செய்கையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவேதான், விவசாய நாடுகளில் – நிலவின் சுற்றுக்களை மாதமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் – நிலவின் மாதத்திற்கும், சூரிய தொடர்புடைய ஆண்டிற்கும் சமன் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வாரக்கணக்கை ஆண்டுக்கணக்குடன் நம்மைப்போன்ற விவசாய நாடுகள் சமன் செய்ய முயற்சிக்கவில்லை. வாரங்கள் தன்போக்கிற்கு வந்துகொண்டேயிருக்கிறது.


அத்தகைய நிர்ப்பந்தங்கள் ஏதும் இஸ்லாமிய காலண்டர்களுக்கு இல்லை. இஸ்லாமிய காலண்டர்களின் உற்பத்தி ஸ்தானமான அரபுநாடுகள் பெரும்பாலும் பாலை வனத்தால் ஆனவை. அவற்றில் விவசாயம் நடத்துவது எளிதல்ல. (தற்போதைய துபாய் உட்பட்ட அரபுநாடுகளில் நவீன முறைகளைப்பின்பற்றி பெரும் தோட்டங்களை உருவாக்கி பாலை நிலத்தில் சோலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வேறு விசயம்). 

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு பாலைவனங்களில் விவசாயம் இல்லை. வணிகமே பிரதான தொழில். ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்ப்பதும் தொழிலாக இருந்திருக்கிறது. பெட்ரோல் கண்டுபிடிப்பெல்லாம் பிற்காலத்தியவை.

அரபுமார்கள் பெரும் பணம் மிகுந்த பிரபுமார்களாக இருந்திருக்கின்றனர். உலகின் பல தேசங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து பெரும் பொருள் குவித்திருக்கின்றன். அவ்வாறு வியாபாரம் செய்ய இயலாதவர்கள் – பெரும் தனவந்தர்களின் அடிமையாக இருந்திருக்கின்றனர். .இந்நிலையால்தான் ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு அரபுநாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. இந்நிலை அகற்றி ஏழைகளுக்கு அருள்பாலிக்கத்தான் தன் பெரும் போதனைகளை நபிகள்(ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்.

இத்தகைய வாழ்க்கை முறைக்கு சூரிய காலண்டர்கள் அவசியப்பட்டிருக்கவில்லை போலும். அதனால்தான் நிலவினை அடிப்படையான காலண்டர்களை அல்லாஹ் அருளினார் போலும். எனவேதான் சில சமயங்களில் தீபாவளியை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் பொங்கலை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் ஒரே கிரிகோரியன் ஆண்டில் இரண்டு ரம்ஸானும் வர நேர்கிறது.

ஆக, இஸ்லாத் மாதங்கள் ஆண்டிற்கு பன்னிரண்டு. 

1. முஃகர்ரம்

2. சஃபர்

3. ரபி உல் அவ்வல்

4. ரபி உல் ஆகிர்

5. ஜமா அத்துல் அவ்வல்

6. ஜமா அத்துல் ஆகிர்

7. ரஜப்

8. ஷஃபான்

9. ரமலான்

10. ஷவ்வால்

11. துல் கஃதா

12. துல் ஹிஜ்ஜா

என்பவைதான் அவைகள்.

இஸ்லாமிய மதம் தியாகத்தைப் போற்றுகிறது. தியாகமே இஸ்லாம் சொல்லும் அடிப்படை கருத்து. எனவேதான், இஸ்லாமிய காலண்டர்களும் தியாகத்தைக் குறிக்கும் மாதத்தினில் ஆரம்பித்து தியாகத்தைக் குறிக்கும் மாதத்தில் முடிவடைகிறது.


முதல் மாதமான முஃகர்ரமானது, முகமது நபிகள் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி அவர்கள் நாட்டில் பிரபுக்களின் (காஃபிர்கள்) கொடுமை வீழ்ந்து ஏழை எளியோரின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, கர்பலாக் என்னும் போர்களத்தில் தனது இன்னுயிரை இழந்ததைக் குறிப்பிடும் தியாக மாதமாகும்.


பன்னிரண்டாவது மாதமான துல்ஹிஜ்ஜாவோ – இறை நம்பிக்கையில் தலைசிறந்தவரான இப்ராஹிம் அலை அவர்கள் தனது அருந்தவப்புதல்வனான இஸ்மாயிலை இறைவனுக்கு பலியிடத்துணிந்த தியாகத்தைக் குறிக்கிறது. 


இவ்வாறான தியாகத்தைப்போற்றும் இஸ்லாமியக்காலண்டர்களில் நான்கு மாதங்கள் மிகப்புனிதம் வாய்ந்தவையாக அல்லாஹ் அறிவுறுத்துகிறார். இம்மாதங்களில் பாவங்கள் செய்யாத படிக்கு இஸ்லாமியர்களை ஆணையிடுகிறார்.

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்'' (ஸஹீஹுல் புஹாரி- -3197)

என்று ஸல் அவர்கள் விளக்குகிறார்.

Thursday, October 29, 2015

பல்லி - வெள்ளி

ஆதி நாளில் அறிவுடையோர் சேர்ந்த மக்கள் குழுவானது முகம்மது நபிகள் (ஸல்) அவர்களிடம், நிலவு நாள்தோறும் தேய்ந்து வளர்ந்தும் வருகிறதே அதற்கான காரணம் என்ன? அதனைக் கொண்டு அல்லாஹ் என்ன நமக்கு அருள்கிறார் என்று கேட்டார்கள். அப்பொழுதுதான் குரானின் காலண்டர்கள் பற்றிய தெய்வ வசனம் எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்டது.

"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. நீங்கள் அவற்றை பின்பற்றி வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 02:189 ) 

மேலும் கீழ்வரும் வசனங்களும் இறைவனால் உரைக்கப்பட்டு நிலவின் அடிப்படையிலான நாட்களின் கணக்கீட்டைக் குறிக்கின்றன.

"அவன் தான் (அல்லாஹ்) சூரியனைச் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் தக்க காரணம் கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் இவ்வாறு அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." (திருக்குர்ஆன் 10:5)

இவ்வாறான இறைவாக்கின் அடிப்படையில் இனிமை தாலாட்டும் இரவில் துவங்குகின்றது இஸ்லாத்தின் “நாள்“. நிலவின் உதயகாலத்தில் நாள் என்பது பிறக்கும் என்று அல்லாஹ் ஆரம்ப காலத்திலேயே அருளியிருக்கிறார் என்பதுதான் முசல்மான்களின் நம்பிக்கை. அறிவியலின் படியும் நிலவின் அடிப்படையில் பிரிக்கப்படும் நாட்கள் மிகவும் துல்லியமானது. இயற்கையானது. பிழைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லாதது. ஆனால் நவீன காலத்தில் ‘ஹதீஸ்’களைக் ( ஹதீஸ்கள் என்றால் நிலவின் தேய்தல் வளர்தலைக் கணக்கிடும் இஸ்லாமிய முறை ) கணக்கிடுவதில் பண்டைய நுட்பங்களை அறிந்தவர்கள் இல்லாத காரணத்தினால் சிற்சில தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. அதனாலேதான் ரம்ஸான் போன்ற விஷேச தினங்களைக் கடைசிக்கட்டம் வரையில் காத்திருந்து நிலவின் பிறைபார்த்து அறிவிக்க வேண்டியிருக்கிறது.

வரலாற்றைக் காண்போமானால் வெவ்வேறு காலகட்டத்தில் முஸ்லீம்களின் –நாளை-க் கணக்கிடும் முறை மாறுபட்டு வந்துள்ளது. கணித அடிப்படையில் நிலவின் படிநிலைகளைக் கணக்கிட்டு நாட்களை முன்கூட்டிய கணித்த காலண்டர்களைக் வெளியிடுவது ஒரு முறை. 

அந்த அந்த பொழுதுகளில் பிறை தெரிவதைப் பார்த்த பிறகே – புதிய நாளோ மாதமே பிறப்பதாக அறிவிப்பது மற்றொரு முறை. இவ்விரண்டு முறைகளிலும், துல்லிய கணக்குகளின் அடிப்படையில் நாளையும் – மாதத்தையும் கணக்கிட்டு முன்கூட்டியே வெளியிடும் காலண்டர் முறையே நவீன காலத்திற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுவே சற்றேரக்குறைய உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டும் வருகிறது.

ஏழு நாட்களைக் கொண்டது ஒரு வாரம். இந்த வார நாட்கள் நம் நாட்டுக்காலண்டர்கள் போலவோ, தற்போதைய கிரிகோரியன் காலண்டர்கள் போலவோ.. கிரகங்களின் பெயரிடப்பட்டவை அல்ல. மாறாக. அரபுக்காலண்டர்களோ தன் வாரநாட்களின் பெயர்களாக வரிசை எண்களையே கொண்டிருக்கின்றன.

அஹத் என்ற அரேபியச் சொல்லிற்கு முதன்மை என்று பொருள். எனவேதான் இஸ்லாமியக்காலண்டரின்படி வாரத்தின் முதல் நாளான சனிக்கிழமைக்கு “யௌமுல் அஹத்“ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆமாம் பாஸ் ஆமாம். முஸ்லீம்களுக்கு வாரத்தின் முதல்நாள் சனிக்கிழமை. கடைசிநாள் வெள்ளிக்கிழமை. இந்த இறுதிநாள் இறைவனுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளிக்கிழமை “துஆ – பிரார்த்தனை செய்வது“ புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது.



இந்த வெள்ளிக்கிழமை சம்மந்தமாக எங்களது இளமைக்காலத்தில் பல்வேறு வதந்திகள் உலவிவந்தன. நாங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த ஒரு தெருவில் அப்போது வசித்து வந்தோம். முஸ்லீம் சிறுவர்களுடன்தான் அதீத நட்பு. சரியா? தவறா? என்று எனக்குத் தெரியவில்லை என்ற போதிலும் எங்களுக்குள் ஒரு வினோதப் பழக்கம் உண்டு. அதாவது வெள்ளிக்கிழமை அன்று “பல்லி“யைக் கொன்றால் அல்லாஹ் அருள்புரிவான் என்று நம்பிக்கை கொண்டு, வகைதொகையில்லாமல் பல்லியை துரத்தித்துரத்தி கொன்றிருக்கிறோம். 

ஒருமுறை என் நண்பன் சாகுல் அன்று நாங்கள் அடித்த செத்த பல்லிகளையெல்லாம் அவனது அரைக்கால்சட்டையின் பாக்கெட்டில் போட்டு வைத்தவாறு மறந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். மறுநாள் காலையிலும் மறந்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான்.

அன்று மதியம்போல் அவனது அக்கா அந்த உடையைத் துவைக்க எடுத்த போது அவன் சேர்த்து வைத்த பல்லிகளைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டாராம். நாங்கள் மாலையில் பள்ளி விட்டு வந்தபிறகு, சாகுலின் அம்மா.. அவன் சேர்த்து வைத்திருந்த செத்த பல்லிகளுக்காக.. எங்களைச் சாவடி அடித்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சாகும் வரை மறக்க முடியாதல்லவா?

அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையில் முடியும் வாரத்தின் பட்டியல் இதோ..

எண்
இசுலாமிய நாள்
தமிழ் நாள்
1 வது
யௌமுல் அஹத்
சனிக் கிழமை
2 வது
யௌமுல் இஸ்னைண்
ஞாயிற்றுக் கிழமை
3 வது
யௌமுல் ஸுலஸா
திங்கட் கிழமை
4 வது
யௌமுல் அருபா
செவ்வாய்க் கிழமை
5 வது
யௌமுல் கமைஸ்
புதன் கிழமை
6 வது
யௌமுல் ஜுமுஆ
வியாழக் கிழமை
7 வது
யௌமுல் ஸப்த்
வெள்ளிக் கிழமை